ஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள் காப்பகம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-12-08 23:15 GMT

ஈரோடு,

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா ஈரோட்டில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகளின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் எல்லா சிறப்பும் பெறுவதற்காக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கிறது. அவர்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்களினால் தமிழகம் முதலிடம் பெற்று திகழ்கிறது.

ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். தற்போதைய அரசும் அந்த திட்டத்தை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.

இந்த விழாவில் சக்தி மசாலா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் பி.சி.துரைசாமி ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதில், ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்களுக்காக தமிழகத்திலேயே முதல் முறையாக ஈரோடு மாவட்டத்தில் ஒரு காப்பகம் தொடங்க வேண்டும் என்றும், அதற்காக 2 ஏக்கர் நிலத்தையும், செலவு தொகையில் 3–ல் ஒரு பங்காக ரூ.3 கோடியை சக்திதேவி அறக்கட்டளை சார்பில் வழங்குவதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும், மீதமுள்ள தொகையை தமிழக அரசு ஒதுக்கி காப்பகம் கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த வேண்டுகோளை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றிணைந்து முதல்–அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காப்பகம் அமைக்க பரிசீலனை செய்யப்படும்.

ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராடுவது வேறு. அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபடுவது என்பது வேறு. எனவே அரசாணையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

ஆசிரியர்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்பதற்காக ஒரு நபர் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஆசிரியர்கள் தங்களது சம்பளம் உள்பட அனைத்து பிரச்சினைகளையும் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் தமிழக அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இது இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அரசு உயர்நிலை பள்ளிக்கூடம், மேல்நிலை பள்ளிக்கூடங்களில் பயோ மெட்ரிக் எனப்படும் ஆசிரியர் பதிவேடுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அது ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது. படிப்படியாக அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும் பயோ மெட்ரிக் முறை செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

மேலும் செய்திகள்