கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை: கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

கோபி அருகே தொழில் அதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள்.

Update: 2018-12-09 22:30 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வடுகபாளையம் புதூரை சேர்ந்தவர் வினோத்குமார். இவர் திருப்பூரில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பாப்பம்பட்டி மடக்காட்டு தோட்டத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் நித்தியாதேவிக்கும் (வயது 24) கடந்த 2014–ம் ஆண்டு திருமணம் நடந்தது. வினோத்குமாருக்கும், நித்தியாதேவிக்கும் சர்வதிரிஷ் (3) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் நித்தியாதேவி மீண்டும் கர்ப்பம் ஆனார். இவருக்கு ஆடி மாதம் குழந்தை பிறக்கும் என்று உறவினர்கள் கணித்திருந்தனர். ஆனால் இதை அவருடைய மாமியார் யசோதாவும், மாமனார் மணியும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கருவை கலைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார்கள்.

ஆனால் நித்தியாதேவி கருவை கலைக்க விரும்பவில்லை. இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி கவலைப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வினோத்குமார் அரிசி ஆலைக்கு சென்றுவிட்டார். நித்தியாதேவி, அவருடைய மாமனார், மாமியார் மட்டும் வீட்டில் இருந்தனர்.

இந்தநிலையில் நித்தியாதேவி மதியம் மாடிக்கு படுப்பதற்காக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் அங்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறி கொக்கியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து நித்தியாதேவியின் தந்தை கோபி போலீசில் புகார் செய்தார். அந்தப்புகாரில், ‘எனது மகள் நித்தியாதேவியின் சாவின் சந்தேகம் உள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது நித்தியாதேவியின் கணவர் வினோத்குமார், மாமியார் யசோதா, மாமனார் மணி, நாத்தனார் சங்கீதா ஆகிய 4 பேர் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நித்தியாதேவிக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ. அசோகன் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்