வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல் பத்து உற்சவம் தொடங்கியது. நம்பெருமாள் நீள் முடி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

Update: 2018-12-08 22:45 GMT
திருச்சி,

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவானது பகல்பத்து, ராப்பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் இரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

நேற்று பகல் பத்து திருமொழி உற்சவத்தின் முதல் நாள் ஆகும். இதனையொட்டி நேற்று காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார். நம்பெருமாளுடன் உடையவர் எனப்படும் ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரும் எழுந்தருளினார்கள். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் திருப்பல்லாண்டு முதல் பாசுரம் மற்றும் பெரியாழ்வார் திருமொழி 212 பாசுரங்களையும் அபிநயம், வியாக்யானத்துடன் பாடினார்கள். அப்போது அங்கு திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளையும் ஆழ்வார்களையும் தரிசனம் செய்தனர்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அலங்காரம், அமுது செய்ய திரையிடப்பட்டது. மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை உபயகாரர்கள் மரியாதையுடன் மீண்டும் பக்தர்கள் பொதுஜன சேவைக்கு அனுமதிக்கப்பட்டனர். பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் நீள் முடி அலங்காரத்தில் வைர அபயஹஸ்தம், மார்பில் லட்சுமி பதக்கம், முத்து ஆரங்கள், காசுமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.

பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் தினமும் காலை மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 17-ந்தேதி நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருள்வார். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான வருகிற 18-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள்வார். நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து சென்றால் சொர்க்கத்தை அடையலாம் என்பது ஐதீகமாகும். எனவே இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி விழாவின் நேற்றைய நிகழ்ச்சியில் பிரபல சினிமா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் ராஜகோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. ராப்பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் எழுந்தருளும் ஆயிரங்கால் மண்டபம் மலர்களாலும், வண்ணத்துணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் மணல் வெளி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பந்தல், பரமபதவாசல் வழியாக நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு வரும் பாதை ஆகிய இடங்களிலும் பந்தல் அமைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் மாநகர காவல் துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்