ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துவிட்டதாக கூறும் பா.ஜனதாவின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை சித்தராமையா பேட்டி

ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துவிட்டதாக கூறும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

Update: 2018-12-08 22:30 GMT
மைசூரு, 

ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்துவிட்டதாக கூறும் பா.ஜனதாவினர் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.

சித்தராமையா பேட்டி

சாம்ராஜ்நகரில் அரசு பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள பெங்களூருவில் இருந்து மைசூரு வந்த முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சியை கவிழ்க்க முயற்சி

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தல்களில் மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜனதா வெற்றி அடைய வாய்ப்பில்லை என தெரியவந்துள்ளது. அதனால் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.

4 மாநில தேர்தல் முடிவுகளும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் அமையும். எடியூரப்பாவுக்கு வயதாகிவிட்டது. இதனால் அவர் கர்நாடக முதல்-மந்திரியாக ஆக துடித்துக்கொண்டு இருக்கிறார். அதற்காக ஜனதாதளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்து வருகிறார். இதன் மூலம் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

குற்றச்சாட்டில் உண்மை இல்லை

எனது ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம்சாட்டு கூறியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டின் அளவு கணக்கில் வித்தியாசம் வருவது சகஜம் தான். ஆனால் பா.ஜனதாவினர் ஏதோ சித்தராமையா ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டதாக குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

ஆட்சியில் இருந்து சிறைக்கு சென்றுவந்தவர்கள் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்