குமரி மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு

குமரி மாவட்ட கோர்ட்டுகளில் லோக் அதாலத் மூலம் 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

Update: 2018-12-08 22:45 GMT
நாகர்கோவில்,

கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதேபோல் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நடந்தது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பத்மநாபபுரம் கோர்ட்டுகளில் நேற்று முன்தினம் வங்கிகளில் பெற்ற கல்வி கடன், தொழில் கடன் போன்ற பிரச்சினைகளுக்காக லோக் அதாலத் நடந்தது. இதில் 59 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக சொத்து வழக்கு, குடும்ப நல வழக்கு, விபத்து வழக்குகளுக்காக லோக் அதாலத் நடந்தது.

நாகர்கோவிலில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் நடந்த லோக் அதாலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.கருப்பையா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை முதன்மை நீதிபதி அப்துல்காதர், குடும்பநல நீதிபதி கோமதிநாயகம், மாவட்ட மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மகிளா கோர்ட்டு நீதிபதியுமான ஜாண் ஆர்.டி.சந்தோசம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான பசும்பொன் சண்முகையா, முதன்மை சார்பு நீதிபதி சுதாகர், சார்பு நீதிபதி ராபின்சன், மாஜிஸ்திரேட்டுகள் பாரததேவி, ராஜா எஸ்.ரம்யா, கிறிஸ்டியன், ஓய்வுபெற்ற நீதிபதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் 9 அறைகளில் நீதிபதிகள் அமர்ந்து சொத்து வழக்குகள், குடும்பநல வழக்குகள், மோட்டார் விபத்து வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை வரவழைத்து விசாரித்து தீர்வு கண்டனர். இதேபோல் பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சி மாலை வரை நடைபெற்றது. நாகர்கோவில் உள்பட 5 கோர்ட்டுகளிலும் வங்கிகள் தொடர்பான வழக்குகள் 3871-ம், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் 3284-ம் ஆக மொத்தம் 7155 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் வங்கிகள் தொடர்பான வழக்குகளில் 242 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. இதேபோல் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளில் 161-க்கு தீர்வு காணப்பட்டு ரூ.4 கோடியே 3 லட்சத்து 84 ஆயிரத்து 638 வசூலிக்கப்பட்டது. மொத்தத்தில் 403 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.5 கோடியே 89 லட்சத்து 57 ஆயிரத்து 138 வசூல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்