மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளி கைது

மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-08 22:30 GMT
மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயது பெண் ஒருவர் ஆடு மேய்த்து வருகிறார். இவர் தினமும் காலையில் அமராவதி ஆற்றங்கரையோரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். பின்னர் மாலையில் ஆடுகளை வீடுகளுக்கு ஓட்டி வருவார்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு, வயிறு பெரிதானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், “ கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்று கேட்டனர். அப்போது அந்த பெண், கடத்தூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த கூலிவேலை செய்து வரும் தன்னாசி (58) என்பவர்தான் காரணம் என்றும், அவர்தான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர், தன்னாசி மீது கணியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தன்னாசியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணின் கர்ப்பத்திற்கு நான் காரணமல்ல என்று திட்டவட்டமாக மறுத்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு பின்பு அந்த பெண்ணுக்கு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், அந்த பெண்ணின் குழந்தை மற்றும் தன்னாசியின் மரபணுவை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கணியூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து 3 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்களின் மரபணு சோதனை செய்யப்பட்டு அதற்கான அறிக்கை போலீசில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மருத்துவ அறிக்கையில் அந்த பெண், குழந்தை மற்றும் தன்னாசி ஆகியோரின் மரபணுக்கள் ஒத்துப்போனது தெரியவந்தது.

இந்த அறிக்கையை தன்னாசியிடம் காட்டி கணியூர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சம்பவத்தன்று கடத்தூர் அமராவதி ஆற்றங்கரைக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற அந்த பெண்ணை தன்னாசி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பெண் கர்ப்பமாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தன்னாசியை, கணியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட தன்னாசிக்கு அஞ்சலை (48) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, கூலித்தொழிலாளி ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்