மன்னார்குடி அருகே மணல் கடத்தி வந்த லாரி கவிழ்ந்தது; வாலிபர் பலி 2 பேர் படுகாயம்

மன்னார்குடி அருகே மணல் கடத்தி வந்த லாரி கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் வந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-12-09 22:15 GMT
சுந்தரக்கோட்டை,


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடகாரவயல் என்ற கிராமத்தில் ஆற்று மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கிராம சாலையில் இருந்து மன்னார்குடி-கும்பகோணம் மெயின் சாலையில் ஏறியபோது நிலைதடுமாறி அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த லாரியில் மணல் மேல் அமர்ந்திருந்த குறுவைமொழி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (வயது33), செந்தில் (31), சவுரிராஜன்(20) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காயம் அடைந்த ரமேஷ், செந்தில், சவுரிராஜன் ஆகிய 3 பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது ரமேஷ் இறந்து விட்டது தெரியவந்தது. இதையடுத்து செந்தில், சவுரிராஜன் ஆகிய 2 பேரையும் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் லாரியில் ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்