ஆப்பூர் ஊராட்சியில் வெளிமாநில மது விற்பனை; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஆப்பூர் ஊராட்சியில் வெளிமாநில மது விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-09 22:30 GMT

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்டது ஆப்பூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் அங்கு தங்கி வேலை பார்க்கின்றனர். ஆப்பூர், ஒரகடம், சேந்தமங்களம் வளையக்கரனை, வெங்கடாபுரம், கொளத்தூர், தெள்ளிமேடு, வெண்பாக்கம், திருக்கச்சூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மது குடிக்கவேண்டும் என்றால் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்குதான் செல்ல வேண்டும்.

சில சமூக விரோதிகள் ஆப்பூர் ஊராட்சியில் உள்ள மலையடிவாரம் ஆட்டோநகரம் தண்ணீர் தொட்டி அருகே புதுச்சேரி மாநில மதுவை விற்கின்றனர்.

ஹெல்மெட் அணியாமலும், மது குடித்து கொண்டு வாகனம் ஒட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர்களை ஸ்ரீபெரும்புதூர் ஜங்‌ஷனில் வைத்தே போலீசார் பிடித்து வழக்கு போடுகின்றனர். இதற்கு பயந்து இந்த பகுதியை சேர்ந்தவர்களும் வெளி மாநில ஊழியர்களும் இங்கேயே வெளிமாநில மதுவை வாங்கி குடிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவ–மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஆகவே போலீசார் அந்தபகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வெளி மாநில மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்