மாணவி மாடியில் இருந்து குதித்து சாவு: பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் முற்றுகை போராட்டம்

செல்போன் உபயோகித்ததை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவி இறந்தார். இதையொட்டி மாணவர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-09 23:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை அம்மன் நகரை சேர்ந்தவர் சிவனேசன் மகள் சுவேதா. இவர் சிவகங்கையில் உள்ள ஆக்ஸ்வேர்டு மேல்நிலைபள்ளியில் 11–ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 5–ந் தேதி பள்ளிக்கு செல்போன் கொண்டுவந்தது குறித்து ஆசிரியர்கள், மாணவியின் தந்தையை அழைத்து மாணவி செல்போன் பயன்படுத்தியது பற்றி கூறினர்.

இதனால் மனமுடைந்த மாணவி பள்ளியின் மாடியில் இருந்து குதித்தார். அதில் படுகாயமடைந்த சுவேதா மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தநிலையில் ஆக்ஸ்வேர்டு பள்ளிகூடம் முன்பு சுவேதாவுடன் படித்த மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவ–மாணவிகள் நேற்று காலையில் ஒன்று திரண்டனர். அவர்கள், பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும், மாணவி சுவேதா பிரச்சினையை கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அழகர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்