அரசு கட்டிடத்தில் குவிந்து கிடக்கும் பாலித்தீன் பைகள் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

கரூர் அருகே அரசு கட்டிடத்தில் குவிந்து கிடக்கும் பாலித்தீன் பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க் கின்றனர்.

Update: 2018-12-09 22:45 GMT
கரூர்,

தமிழகத்தில் சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்திடும் நோக்கில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல், ஒருமுறை பயன் படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தடை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் முன்னோட்டமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களான (தடிமன் வேறுபாடின்றி) பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் மேசை விரிப்புகள், பிளாஸ்டிக் தெர்மாகோல், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித குவளைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. மேலும் கரூரில் உள்ள தள்ளுவண்டி உணவகங்கள், ஓட்டல்களிலும் கூட வாழை இலை, பாக்குமரத்தட்டு உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் கரூர் ஊராட்சி ஒன்றியம் பஞ்சமாதேவி பகுதியில் உள்ள ஒரு அரசு கட்டிடத்தில் மூட்டைகளில் கட்டப்பட்ட நிலையில் பாலித்தீன் பைகள் உள்ளிட்ட குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த அரசு கட்டிடத்தை வேறு உபயோகத்திற்காக பயன்படுத்த முடிவதில்லை.

அந்த அரசு கட்டிடம் பற்றி விவரம் வருமாறு:- பஞ்சமாதேவி பகுதியில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது, பராமரிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்காக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கடந்த 2013-14-ம் ஆண்டில் கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கிடையே கரூரிர் ஊரக பகுதியிலுள்ள பாலித்தீன் பைகளை சேகரித்து மறுசுழற்சிக்காக பயன்படுத்தும் பணிகள் நடந்தன. இதையொட்டி ஊராட்சி பணியாளர்கள் ஆங்காங்கே பாலிதீன் பைகள் சார்ந்த குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வைத்தனர். அந்த வகையில் பஞ்சமாதேவி அரசு கட்டிடத்தில் பாலித்தீன் பைகள் சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் பாலித்தீன் சேகரிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால், நீண்ட நாட்களாக இந்த கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது. அதன் உள்ளே மூட்டை மூட்டையாக குவித்து வைக்கப்பட்டுள்ள பாலித்தீன் பைகள் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. அந்த கட்டிடத்தின் முன்புற பகுதியில் சீமைக்கருவேல மரங்கள், வேண்டாத செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சியளிக்கின்றன.

எனவே தமிழகத்தில் வருகிற ஜனவரி முதல் பிளாஸ் தடை வருகிற வேளையில், பஞ்சமாதேவி கட்டிடத்திலுள்ள பாலித்தீன் பை குப்பைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். அப்படி செய்தால் அந்த கட்டிடத்தில் வேறு ஏதாவது ஒரு அரசு அலுவலகம், கிராம சேவை மையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம். மேலும் 2019-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் அதற்குள் பிளாஸ்டிக் பயன்படுத்தப் படாதது குறித்த வரைமுறையை அறிவித்து மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் செய்திகள்