ஆத்தூரில் திருமண மண்டபத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகைகள் திருட்டு 2 மாணவர்கள் பிடிபட்டனர்

ஆத்தூரில், திருமண மண்டபத்தில் பெண்ணிடம் 10 பவுன் நகைகளை திருடிய 2 மாணவர்கள் பிடிபட்டனர்.

Update: 2018-12-09 22:00 GMT
ஆத்தூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ஒரு மணமகனுக்கும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணமகளுக்கும், ஆத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்தது. இதற்காக மணமகளின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்திற்கு வந்து அங்கு தங்கியிருந்தனர். மணமகளின் உறவினர் குழந்தைசாமி என்பவரது மனைவி மல்லிகா (வயது 50). இவரும் அந்த திருமண மண்டப அறையில் தங்கியிருந்தார். அப்போது மல்லிகாவின் கைப்பையில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் திருட்டு போனது. இதனால் திருமண மண்டபத்தில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆத்தூர் போலீசார் திருமண மண்டபத்துக்கு வந்தனர். பின்னர் மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர் மல்லிகா தங்கியிருந்த அறைக்குள் நுழைவது தெரிந்தது.

பின்னர் அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் மல்லிகா அறையில் இருந்த நகைகள், பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து நகைகள், பணத்தை மீட்டனர். அவர்களில் ஒருவர் 18 வயது கல்லூரி மாணவர், மற்றொருவர் 17 வயதான பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்