நெல்லை மாவட்டத்தில் தலையாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு கலெக்டர் ஷில்பா உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் தலையாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

Update: 2018-12-09 23:15 GMT
நெல்லை, 

தமிழகத்தில் வருவாய்த்துறையில் தலையாரியாக பணியாற்றி வருபவர்களுக்கு, அவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நெல்லை மாவட்டத்தில் தலையாரியாக வேலை பார்த்து வருகின்ற 9 பேருக்கு கிராம நிர்வாக அலுவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டம் ராயகிரி கிராமம்-2-ல் தலையாரியாக பணியாற்றிய சண்முகசுந்தரபாண்டியன், நாராணபுரம் கிராமம்-1 தலையாரி கணேசன், விக்கிரமசிங்கபுரம் கிராமம்-2 தலையாரி முருகன், மூலைக்கரைப்பட்டி தலையாரி கிருஷ்ணன், கரைச்சுத்துபுதூர் தலையாரி அயூப்கான், முன்னீர்பள்ளம் தலையாரி மாடசாமி, வடக்குபனவடலிசத்திரம் தலையாரி முருகேசன், திருப்பணிகரிசல்குளம் தலையாரி ராமகிருஷ்ணன், திசையன்விளை தலையாரி ஜேம்ஸ் ஆகியோருக்கு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்று உள்ளனர். இவர்களுக்கு சேரன்மாதேவி வருவாய் கோட்டத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.

பதவி உயர்வு பெற்று உள்ள இவர்கள் 2 ஆண்டுகளுக்குள் கிராம நிர்வாக அலுவலருக்கான அரசுத்துறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும். தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் பதவி இறக்கம் செய்யப்பட்டு தலையாரியாகவே பணியாற்ற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்