திண்டிவனம் அருகே: டயர் வெடித்து மினிவேன் கவிழ்ந்தது - சாலையில் பால் ஆறாக ஓடியது

திண்டிவனம் அருகே டயர் வெடித்து மினிவேன் கவிழ்ந்தது. வேனில் கொண்டு செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகள் உடைந்து, சாலையில் பால் ஆறாக ஓடியது.

Update: 2018-12-10 22:00 GMT
திண்டிவனம்,

செஞ்சியில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு மினிவேன் ஒன்று நேற்று முன்தினம் இரவு காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் நோக்கி புறப்பட்டது. அந்த வேனை செஞ்சி ஆலம்பூண்டியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டினார். கிளனர் வினோத்குமார் என்பவரும் உடன் சென்றார். திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் சென்றபோது, வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் மணி, கிளனர் வினோத்குமார் ஆகியோர் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தில் வேனில் இருந்த பெரும்பாலான பால் பாக்கெட்டுகள் உடைந்து போனதால், சாலையின் குறுக்கே பால் ஆறாக ஓடியது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மணி, வினோத்குமார் ஆகியோரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே போலீசார், விபத்துக்குள்ளான பால் வேன் மற்றும் சாலையில் கிடந்த பால் பாக்கெட்டுகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்