வாகனங்கள் மட்டும் அல்ல, நடந்தும்கூட செல்ல முடியாது: கஜா புயலால் சேதம் அடைந்த வேதாரண்யம் கடற்கரை சாலை

கஜா புயலால் சேதம் அடைந்த வேதாரண்யம் கடற்கரை சாலையில் வாகனங்கள் மட்டும் அல்ல, நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தை அமாவாசைக்கு முன்பு இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-12-10 22:45 GMT
வேதாரண்யம்,

தை மற்றும் ஆடி அமாவாசைகளில், இறந்த தங்களின் முன்னோர்களின் நினைவாக ராமேஸ்வரம் மற்றும் வேதாரண்யம் கடற்கரையில் பொதுமக்கள் திதி கொடுத்து புனித நீராடுவது வழக்கம். வேதாரண்யத்தில் சன்னதி கடற்கரையில் திதி கொடுப்பார்கள். இதற்காக வேதாரண்யத்தில் இருந்து கடற்கரை வரை செல்வதற்கான சாலை தார்சாலையாக போடப்பட்டு இருந்தது.

கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மேலும் கடல்நீரும் ஊருக்குள் புகுந்தது. சில இடங்களில் 1 கி.மீ. தூரம் வரைக்கும் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. வேதாரண்யம் பகுதியிலும் கடல்நீர் உட்புகுந்தது. கடலில் இருந்து 1 கி.மீ. தூரம் வரை தரிசு நிலங்கள், முட்செடிகள் காணப்பட்டதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

ஆனால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு சேதம் அடைந்தன. பல மீட்டர் தூரத்திற்கு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் முழுவதுமாக சேதம் அடைந்து சாலைகள் இருந்த இடமே தெரியாத நிலையில் உள்ளன. மேலும் அந்த பகுதி சேறும், சகதியுமாக நிறைந்து காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் வாகனங்களில் மட்டும் அல்ல, நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது கடற்கரைக்கு செல்வோர் சேற்றில் சிக்கி தவித்தபடி சென்று வருகிறார்கள்.

வருகிற தை மாதம் அமாவாசை அன்று வேதாரண்யம் கடற்கரையில் ஏராளமானோர், இறந்த தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுக்க வருவார்கள். இவர்கள் முன்பு கடற்கரை வரை வாகனங்களில் வந்து செல்வார்கள். ஆனால் தற்போது பாதை வசதி இல்லை. எனவே தை அமாவாசை வருவதற்குள் இந்த சாலையை சீரமைத்து, இறந்த தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடுவதற்கு உரிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்