மின்சாரம் வழங்க வலியுறுத்தி தகட்டூர்-பஞ்சநதிக்குளம் கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் வழங்க வலியுறுத்தி தகட்டூர், பஞ்சநதிக்குளம் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-10 22:30 GMT
வாய்மேடு,

நாகை மாவட்டம் தகட்டூர், பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய பகுதியில் கடந்த (நவம்பர்) மாதம் ஏற்பட்ட கஜா புயலால் குடிசை வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவை சேதமடைந்தன. இதனால் பல கிராமங்களில் கடந்த 25 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

வாய்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து ஆயக்காரன்புலம், பஞ்சநதிக்குளம், தென்னடார், மருதூர், தகட்டூர், தாணிக்கோட்டகம், வாய்மேடு, துளசியாப்பட்டினம் ஆகிய பகுதிகள் மின்வினியோகம் பெற்று வருகின்றன. இந்த பகுதிகளில் புயலால் பல மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பெருமளவில் சேதமடைந்தன. இந்த மின்கம்பங்களை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்து மின்வினியோகமும் கிடைத்துள்ளது. இந்த மின்வினியோகம் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உள்பகுதி கிராமங்களான பண்டாரதேவன் காடு, கொண்டான் காடு, சந்தனதேவன் காடு ஆகிய பகுதிகளில் கடந்த 25 நாட்களாக மின்வினியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தகட்டூர் மற்றும் பஞ்சநதிக்குளம் கிராம மக்கள் தகட்டூர் கடைத்தெரு அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமையில், உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுனா மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டு, மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்