இலவச வீட்டுமனை பட்டா கேட்டு: கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-12-10 23:00 GMT
நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மானிய விலையில் அரசு வழங்கும் ஸ்கூட்டர் கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலக வாசல் வரை பெண்கள் வரிசை நீண்டு இருந்தது.

நெல்லை அருகே உள்ள நரசிங்கநல்லூர், கருங்காடு, மேட்டுபிராஞ்சேரி, தீன்நகர், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அகில பாரத இந்து மகாசபா மாவட்ட துணை தலைவர் ராஜா பாண்டியன் தலைமையில் இலவச வீட்டு மனைபட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது.

இதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், நரசிங்கநல்லூர், கருங்காடு, மேட்டுபிராஞ்சேரி, தீன்நகர், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதியில் பல ஆண்டுகளாக வசித்துவரும் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். மேலும் தாமிரபரணியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உத்தரவு பெற்றுள்ள எங்கள் இயக்கத்தின் மாநில துணை தலைவர் கணேசனுக்கு, ஐகோர்ட்டு உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதற்கிடையே திருநங்கைகள், தலைவி ஜோதி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்களை பற்றி அவதூறாக பேசிய ஒரு திருநங்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், தங்களை பற்றி முகநூலில் அவதூறாக பேசிய ஒரு திருநங்கை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் எங்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நாங்குநேரி தாலுகா சவளைக்காரன்குளம், இலங்குளம், நெடுங்குளம், சடையநேரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் நெற்பயிருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளங்களில் ஓரளவு தண்ணீர் இருந்தது. இதை வைத்து நெல் நடவு செய்தோம். தற்போது குளத்தில் தண்ணீர் இல்லை. எனவே நெற்பயிரை காப்பாற்ற வடக்கு பச்சையாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று கூறி உள்ளனர்.

சேரன்மாதேவி அருகே உள்ள மேலஉப்பூரணி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, மணிமுத்தாறு அணையின் 80 அடி வாய்க்கால் முதல் ரீச்சில் தண்ணீர் வழங்கவேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

சுரண்டை அருகே உள்ள பரங்குன்றாபுரம் கிராம மக்கள் மற்றும் பங்களாசுரண்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மாணவர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். தங்கள் ஊரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

நாங்குநேரி அருகே உள்ள கூந்தகுளம் பகுதி மக்கள் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், ஜான்சன் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் திரண்டு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நாங்குநேரி அருகே உள்ள கூந்தகுளம் சர்ச்தெரு, காலனி பகுதியில் குடிநீருக்கான மின்மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் கிடைக்கவில்லை. மேலும் இப்பகுதியில் தெரு விளக்கு கள் சரிவர எரியவில்லை. எனவே குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதியை உடனே செய்து தரவேண்டும். மேலும் எங்கள் பகுதி மக்களுக்கு 100 நாள் வேலை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பருத்திபாடு பஞ்சாயத்து நெல்லையப்பபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் குழாயை தன்னிச்சையாக துண்டித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அந்த ஊர் மக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்தனர்.

தே.மு.தி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் கட்சியினர் கொடுத்த மனுவில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையை விரிவுப்படுத்தி புதிய சாலை அமைக்கவேண்டும். ராதாபுரம்- ராமன்குடி மற்றும் ராதாபுரம்- வடக்கன்குளம் சாலையை விரிவுப்படுத்தி புதிய சாலை அமைக்கவேண்டும். பாளையங்கோட்டை கீழநத்தம் கே.டி.சி.நகர் பாத்திமா கோவில் சாலையை உடனடியாக அமைக்க வேண்டும். பச்சையாறு கால்வாய் பகுதியில் உள்ள சீமை உடை மரங்களை அகற்றவேண்டும் என்று கூறி உள்ளனர்.

ராதாபுரம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் தனியார் செல்போன் நிறுவன கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த ஊர்மக்கள் மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு காட்டுநாயக்கன் சமூக சீர்த்திருத்த சங்கத்தினர் கொடுத்த மனுவில், பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தில் வசித்து வரும் எங்களுக்கு சமுதாய கூடம், இலவச வீட்டுமனைப்பட்டா, சுடுகாடு வசதி செய்து தரவேண்டும் என்று மனு கொடுத்தனர்.

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன் கொடுத்த மனுவில், நெல்லை சந்திப்பு பஸ்நிலையம் ஸ்மாட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கும் போது அங்கு வரும் பஸ்களை மற்ற இடங்களில் நிறுத்துவதற்காக 5 இடங்களில் தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. நெல்லை சந்திப்பின் மையப்பகுதியான நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு தினமும் 30 ஆயிரம் மக்கள் வந்து செல்கிறார்கள். எனவே ரெயில்நிலையத்தின் அருகில் ஒரு பஸ்நிறுத்தம் அமைக்கவேண்டும். நெல்லை உடையார்பட்டி குளத்தில் இரும்பு மேடை அமைத்து அங்கும் ஒரு தற்காலிக பஸ்நிறுத்தம் அமைக்கவேண்டும் என்று கூறி உள்ளார்.

தேசிய அளவில் நடந்த வாள் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற பாளையங்கோட்டை சாராள்தக்கர் மகளிர் கல்லூரி மாணவிகள் வெள்ளத்தாய், அபிராமி ஆகிய 2 பேரையும் குடியரசு தினவிழாவில் பாராட்டி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று பாரதி கலை இலக்கிய மன்றத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

சீவலப்பேரி அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக சிற்றாற்றில் மணல் அள்ளுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கலெக்டரிடம் வக்கீல் உச்சிமாகாளி மனு கொடுத்தார். 

மேலும் செய்திகள்