17-ந்தேதிக்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக்க திட்டம்; மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கெடு

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் ஒரு திட்டம் வருகிற 17-ந்தேதிக்குள் உருவாக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு, ஐகோர்ட்டு கெடு விதித்துள்ளது.

Update: 2018-12-10 23:15 GMT
சென்னை,

நாடு முழுவதும் 15 மீட்டர் நீளத்துக்கு குறைவாக உள்ள நாட்டு படகுகள், 12 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து மீனவர்கள் பாதுகாப்பு பேரவை தலைவர் எல்.டி.இ.பீட்டர்ராயன், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசு திடீரென நாட்டு படகுகளுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தடையை திரும்பப்பெற்ற உத்தரவு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘உலக புகழ் பெற்ற மெரினா கடற்கரை, அசுத்தமாக உள்ளது. இதை சுத்தம் செய்ய மீனவர்களும், மீனவர்கள் நல அமைப்புகளும் முன்வரவேண்டும்’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், மெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க மாநகராட்சி திட்டம் ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதன்பின்னர், மற்றொரு வழக்கில், ஐகோர்ட்டில் ஆஜராகி இருந்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம், இதே கருத்தை நீதிபதிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில், மீனவர்கள் பாதுகாப்பு பேரவை தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கடற்கரையை சுத்தமாக பராமரிக்க எந்த ஒரு திட்டத்தையும் மாநகராட்சி உருவாக்காததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மெரினா கடற்கரை தொடர்ந்து அசுத்தமாக இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். பின்னர், ‘மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் ஒன்றை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி, வருகிற 17-ந்தேதிக்குள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். அதன்பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம், மாநகராட்சி ஆணையர் கோர்ட்டில் நேரில் ஆஜராக நேரிடும்’ என்று உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்