கர்நாடக சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர் கூட்டணி ஆட்சிக்கு இருந்த சிக்கல் நீங்கியது

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். இதன் மூலம் கூட்டணி ஆட்சிக்கு இருந்த சிக்கல் நீங்கியது.

Update: 2018-12-10 23:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 2 இடங்களும் காலியாக உள்ளன. காங்கிரசில் மந்திரி பதவி கிடைக்காத சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கூட்டணி ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியும், மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 22-ந் தேதி நடைபெறும் என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

சட்டசபை கூட்டத்ெதாடர் தொடங்குவதற்கு முன்பு மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் தள்ளிப்போனதால், அந்த எம்.எல்.ஏ.க்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரை காங்கிரசை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் வரை புறக்கணிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் நேற்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் காங்கிரசை சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி, மற்றும் சுதாகர் எம்.எல்.ஏ. ஆகிய 2 பேரை தவிர மற்றவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கூட்டணி ஆட்சிக்கு இருந்த சிக்கல் நீங்கியது என்றே சொல்லலாம்.

மேலும் செய்திகள்