பிற சாதி பெண்களை இழிவுபடுத்தி பேசிய 3 பேர் கைது: சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதால் நடவடிக்கை

பிற சாதி பெண்களை இழிவுபடுத்தி பேசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-10 22:15 GMT

திருவள்ளூர்,

சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாள் கடந்த 6–ந் தேதி அனுசரிக்கப்பட்டது. அப்போது திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திரளானவர்கள் அந்தந்த பகுதிகளில் அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் அம்பேத்கரின் உருவ படத்துக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், சாலமன் (வயது 34), அன்புராஜ் (31), வினோத் (26) ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் வேறு சாதி பெண்களை இழிவுபடுத்தி பேசியும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இது சம்பந்தமாக நரசிங்கபுரத்தை சேர்ந்த சாலமன், அன்புராஜ், வினோத் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அன்பழகனை தேடி வருகின்றனர். சாலமன், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்