அரசு பஸ் மீது கார் மோதிய விவகாரம்: விபத்தில் சிக்கிய 2 பேர் கிணற்றில் பிணமாக மீட்பு

பல்லடம் அருகே அரசு பஸ் மோதிய விவகாரத்தில் விபத்தில் சிக்கிய 2 பேர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டனர். போதையில் வழி தெரியாமல் சென்றவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்து விட்டது.

Update: 2018-12-11 23:15 GMT

காமநாயக்கன்பாளையம்,

திருப்பூரில் இருந்து கடந்த 9–ந் தேதி இரவு ஒரு கார் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த காரில் டிரைவருடன் சேர்த்து 2 பேர் இருந்தனர். இந்த கார் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் குட்டை பகுதியில் சென்றது. அப்போது எதிரே கோவையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் லேசான சேதம் அடைந்தது. அதே போல் அரசு பஸ்சின் முகப்பு விளக்கு உடைந்தது.

இந்த விபத்து தொடர்பாக யார் மீது தவறு என்று காரை ஓட்டிச்சென்றவர்களுக்கும், அரசு பஸ் டிரைவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரசு பஸ்சில் ஏற்பட்ட சேதத்திற்கு உரிய செலவு தொகையை கொடுப்பதாக காரில் சென்றவர்கள் கூறினார்கள். சிறிது நேரத்திற்கு பிறகு செலவு தொகையை தரமுடியாது என்று அவர்கள் தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும், விபத்தை ஏற்படுத்திய காரில் சென்ற இருவரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். ஆனால் அவர்கள் போலீஸ் நிலையம் வர மறுத்து விட்டனர். இதையடுத்து காரின் பதிவு எண் மற்றும் அவர்களின் அடையாளம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு, டிரைவர் பஸ்சை அங்கிருந்து ஓட்டிச்சென்று விட்டார்.

அதை தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாலையின் ஓரமாக விபத்தில் சிக்கிய கார் மட்டும் நிறுத்தப்பட்டு இருந்தது. காரில் வந்தவர்களை காணவில்லை. எனவே அவர்கள் அந்த பகுதியில் நிற்கிறார்களா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்று விட்டனர். ஆனால் கார் மட்டும் அங்கேயே அனாதையாக நின்றது.

இந்த நிலையில் நேற்று காலையில் செம்மிபாளையத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் குட்டைக்காட்டு பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். இந்த தோட்டத்தில் 80 அடி ஆழம் கொண்ட கிணறு இருக்கிறது. இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

அப்போது அவர், கிணற்றை எட்டிப்பார்த்தபோது, கிணற்றுக்குள் 2 பேர் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசாரும், பல்லடம் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று கிணற்றில் மிதந்த 2 பேரின் உடலையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து அவர்களின் சட்டை பையில் ஆவணங்கள் ஏதாவது உள்ளதா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். அப்போது அவர்களின் சட்டை பையில் அடையாள அட்டை இருந்தது.

அதில் ஒருவரின் பெயர் ராஜேஸ்வரன் (வயது 35), அண்ணாநகர், பறவை மதுரை என்றும், மற்றொருவர் அதே பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (34) என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் எப்படி கிணற்றில் விழுந்து இறந்தனர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ராஜேஸ்வரன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு கார் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த அ.தி.மு.க. பிரமுகரின் ஈரோட்டை சேர்ந்த நண்பர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பெங்களூருவுக்கு வருவதாகவும், அவரை பெங்களூரு விமான நிலையில் இருந்து காரில் ஈரோட்டிற்கு அழைத்து செல்வதற்காக, மதுரையில் இருந்து காரை எடுத்துக்கொண்டு ராஜேஸ்வரன் பெங்களூரு சென்றுள்ளார்.

பின்னர் அந்த அ.தி.மு.க. பிரமுகரின் நண்பரை, பெங்களூருவில் இருந்து காரில் ஈரோட்டிற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். பின்னர், அங்கிருந்து காரில் திருப்பூர் வந்த ராஜேஸ்வரன், தனது நண்பரும், தற்போது திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து மில் உரிமையாளர் ஒருவருக்கு கார் ஓட்டிவரும் சரவணக்குமாரை அழைத்துக்கொண்டு ஒரு பாரில் மது குடித்து உள்ளார். பின்னர் இருவரும் கோவை சென்றுள்ளனர். காரை ராஜேஸ்வரன் ஓட்டினார். முன் இருக்கையில் சரவணக்குமார் அமர்ந்து இருந்தார். அப்போதுதான் அவர்களுடைய கார் பல்லடம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பஸ் மீது மோதி விபத்துள்குள்ளானது.

இதையடுத்து அரசு பஸ் டிரைவருக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படவும், அரசு பஸ் டிரைவர் போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு சென்று விட்டார். இதற்கிடையில் காரை விட்டு, இறங்கிய ராஜேஸ்வரனும், சரவணக்குமாரும் அந்த பகுதியில் உள்ள காட்டிற்குள் சென்று உள்ளனர். அப்போது அந்த பகுதியில் கிணறு இருப்பது இரவு நேரத்தில் தெரியாததாலும், அந்த கிணற்றுக்கு தடுப்பு சுவர் இல்லாததாலும் அவர்கள் இருவரும் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் இருந்ததால், தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். கார் நிறுத்தப்பட்டு இருந்த இடத்திற்கும், அந்த கிணறு இருந்த இடத்திற்கும் 200 மீட்டர் தூரம் தான் இருந்துள்ளது. காரை நிறுத்தி விட்டு போதையில் வழி தெரியாமல் சென்றதால் அவர்கள் கிணற்றில் விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்