ராமநாதபுரம் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி குறித்து பரபரப்பு தகவல்; பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்

ராமநாதபுரத்தில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓடினார். அவர் பல்வேறு பகுதிகளில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

Update: 2018-12-11 22:15 GMT

ராமநாதபுரம்,

சனவெளி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர பாண்டியன். பூசாரியான இவர் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் நகை, பணம் ஆகியவற்றை திருடிவிட்டு தப்பி ஓடியபோது பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னை வியாசர்பாடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சந்தோஷ்குமார்(வயது 28) என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் தாக்கியதால் படுகாயமடைந்த வாலிபர் சந்தோஷ்குமார் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நள்ளிரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு, அவர் தப்பி ஓடிவிட்டார். அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடிவருகின்றனர். இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த விசாரணையில் சந்தோஷ்குமார் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அவர் சென்னை அருகே உள்ள மதுரவாயல் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் டேனியல் என்ற யுவராஜா என்பதும் தெரியவந்துள்ளது. சோழவரம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதும், பின்பு பல்வேறு வழக்குகளில் அவரை போலீசார் தேடி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல, பல பகுதிகளில் சந்தோஷ்குமார் குறித்து தகவல்கள் வருவதால் அது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பல பகுதிகளில் பல பெயர்களில் கைவரிசை காட்டி போலீசாரால் தேடப்படும் நபராக இருக்கலாம் என்பதால் தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்