கறம்பக்குடி பகுதியில் தொழிற்பட்டறைகள் செயல்படாததால் வேலையின்றி தொழிலாளர்கள் தவிப்பு

கறம்பக்குடி பகுதியில் புயல் பாதிப்பால் தொழிற்பட்டறைகள் செயல் படாததால் தொழிலாளர்கள் வேலை யின்றி தவித்து வருகின்றனர். நிவாரண பொருட்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

Update: 2018-12-11 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் மரப்பட்டறைகள், அரிசி ஆலைகள், கயிறு தொழிற்சாலை, கோழிபண்ணைகள் என சிறிய தொழிற்பட்டறைகள் அதிகம் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், கஜா புயலின் தாக்குதலால் கறம்பக்குடி பகுதியில் இருந்த சிறிய தொழில் நிறுவனங்கள் சின்னா பின்னமாகி விட்டன.

புயல் தாக்குதலுக்கு ஆளாகி பல நாட்கள் கடந்து விட்ட பின்னரும் பெரும்பான்மையான தொழில்நிறுவனங்கள், பட்டறைகள் இன்னும் சீரமைக்கப்படாமலேயே உள்ளன. ஒரு சில மில்கள் சீரமைக்கப்பட்ட போதிலும் மின்சாரம் இல்லாததால் அவையும், செயல்படவில்லை. இதனால் இந்த தொழில் நிறுவனங்களை நம்பி வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

புயல்பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளின் சார்பில் வழங்கப்பட்ட அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வைத்தே தொழிலாளர்கள் தினசரி வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். தற்போது நிவாரண பொருட்களின் வரத்தும் நின்று விட்டதால் உதவி செய்ய வருபவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. வீட்டு வாடகை, மின் கட்டணம், குழந்தைகளின் படிப்பு செலவு என எதையும் செலுத்த முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே புயலால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய தொழில் பட்டறைகளை சீரமைக்கவும், அவற்றிற்கு மின்சாரம் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்