சவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சவுதி அரேபிய, இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.27½ லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2018-12-11 22:45 GMT

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சவுதி அரேபியா ரியாத்தில் இருந்து மஸ்கட் வழியாக சென்னைக்கு வந்த விமானத்தில், பயணிகளை கண்காணித்த போது சுற்றுலா விசாவில் வந்த அகமது பாஷா ஷேக் (வயது 48) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர்.

அவர், கதவு கைப்பிடி மற்றும் 12 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.19 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

அதேபோல இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில், பாத்திமா ஆஸ்மியா (30) என்பவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 தங்க கட்டிகளை கண்டுபிடித்தனர். ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில், முகமது பாசித் (19) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.2 லட்சம் மதிப்புள்ள 60 கிராம் தங்க கட்டியும், ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள 35 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் ஈரான் நாட்டு குங்குமப்பூவும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்