தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து சாவு; மாணவ–மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

தாம்பரத்தில் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து இறந்தார். அதனை தொடர்ந்து மாணவ–மாணவிகள் கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-11 23:45 GMT

தாம்பரம்,

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவருடைய மகள் மகிமா (வயது 18). இவர் கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி வேதியியல் படித்து வந்தார்.

இந்த கல்லூரியில் ‘ஸ்போர்ட்ஸ் பார் ஆல்’ என்கிற பெயரில் ஒவ்வொரு துறையிலும் அனைத்து மாணவ–மாணவிகளும் கட்டாயமாக விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறுவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு நடைபெற்றது.

இதில் மாணவி மகிமா கலந்து கொண்டு விளையாடினார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியின் உடலை அவரது பெற்றோர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் சேலையூர் போலீசார் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.

அதன் படி மாணவி மகிமாவின் பெற்றோர் சம்மதத்துடன் அவரது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் போலீசார் மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதற்கிடையில், மாணவி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. எனினும் கல்லூரிக்கு வந்த மாணவ–மாணவிகள் 100–க்கும் மேற்பட்டோர் கட்டாய விளையாட்டு பயிற்சியை தடை செய்ய வேண்டும் என கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து கட்டாய விளையாட்டு பயிற்சி ரத்து செய்யப்படும் என்றும் வெள்ளிக்கிழமை இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் கல்லூரி இன்று (புதன்கிழமை) முதல் செயல்படும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து மாணவ–மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்