நர்சிங் மாணவி மர்ம சாவு: காதலன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தற்கொலை செய்வேன், பெண்ணின் தந்தை மிரட்டல்

தன் மகளின் மர்ம சாவுக்கு காரணமான காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று நர்சிங் மாணவியின் தந்தை கூறினார்.

Update: 2018-12-11 23:00 GMT
திருப்போரூர்,

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் கிராமம் புதிய காலனியை சேர்ந்தவர் பரந்தாமன். கூலி தொழிலாளி. இவருடைய மகள் மோனிஷா (வயது 18). தாழம்பூர் பகுதியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் மோனிஷா நர்சிங் படித்து வந்தார்.

அதே கல்லூரியில் காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த கேப்ரியேல் காயன் (18) நர்சிங் படித்து வருகிறார். மோனிஷாவுக்கும், கேப்ரியேல் காயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

கடந்த 3-ந் தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மோனிஷா மாலையில் வீடு திரும்பவில்லை. மோனிஷாவை எங்கு தேடியும் கிடைக்காததால் 4-ந் தேதி கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் மகள் காணவில்லை என பரந்தாமன் புகார் அளித்தார். மாயமான மோனிஷாவை போலீசார் தேடிவந்தனர்.

இந்நிலையில் 5-ந் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள குளவாய் ஏரியில் மோனிஷாவின் உடல் கிடந்தது தெரியவந்தது. அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து தனது மகளின் மர்ம சாவுக்கு காதலன் கேப்ரியேல் காயன் தான் காரணம் என செங்கல்பட்டு போலீசில் பரந்தாமன் புகார் அளித்தார். எனினும் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பரந்தாமன் குற்றம்சாட்டினார். மேலும் தனது மகள் படித்த அதே கல்லூரியில் படிக்கும் கேப்ரியேல் காயன் விவரம் குறித்து கல்லூரி நிர்வாகம் முறையாக பதிலளிக்காததால் மோனிஷாவின் தந்தை மற்றும் உறவினர்கள் கல்லூரி வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேப்ரியேல் காயன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்லூரி முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என பரந்தாமன் கூறினார்.

மேலும் செய்திகள்