மாவட்டம் முழுவதும் 2-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு

நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது.

Update: 2018-12-11 22:45 GMT
நாமக்கல்,

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டம் நேற்று 2-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 311 கிராம நிர்வாக அலுவலர்களில் 177 பேர் கலந்து கொண்டனர். இதனால் கிராம நிர்வாக அலுவலகங்களில் தினசரி நடைபெறும் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.

திருச்செங்கோடு வட்டத்தில் 42 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி நேற்று காலை திருச்செங்கோடு வட்ட தலைவர் ராஜா, வட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் மாவட்ட துணை தலைவர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் எலச்சிபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு “மக்களை தேடி” என்ற தலைப்பில் பொது மக்களிடையே காலவரையற்ற வேலை நிறுத்தத்தின் காரணத்தை எடுத்துரைத்து, மக்களிடையே கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைகளை துண்டு பிரசுரம் மூலம் வழங்கி மக்களுக்கு தெரியப்படுத்தினர்.

சேந்தமங்கலம் வட்டம் எருமப்பட்டி ஒன்றியத்தை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வட்ட தலைவர் குமார் தலைமையில் “மக்களை தேடி” என்ற தலைப்பில் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்செல்வன் (பொன்னேரி), சிவராஜ் (கோடங்கிப்பட்டி), அழகேசன் (எருமப்பட்டி), கருப்பையா (முத்துக்கோட்டை), இந்திரா (வரகூர்), மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்