சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்: போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்ததற்கு டிரைவர்கள் எதிர்ப்பு

கூடலூரில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் போக்குவரத்து போலீசார் நள்ளிரவு இரும்பு தடுப்புகளை வைத்தனர். இதை அறிந்த டிரைவர்கள் திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2018-12-12 22:00 GMT
கூடலூர், 

கூடலூர் நகரம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலையின் நடுவில் தடுப்புகளை வைத்துள்ளனர். இதனால் கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் போதிய இடவசதி இல்லை. இதனால் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகள், வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலையிலும் உள்ள தடுப்புகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சாலையில் தடுப்பு கள் வைத்துள்ளதால் இடவசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ள சுற்றுலா வாகனங்களை ஊருக்கு வெளிப்புறம் கொண்டு நிறுத்துமாறு போலீசார் வலியுறுத்தினர். இதற்கு வாகன டிரைவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் புதிய பஸ் நிலையம் பகுதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்று வரும் வகையில் வழிவிடுமாறு போக்குவரத்து போலீசார் டிரைவர்களுக்கு உத்தரவிட்டனர். இதற்கு டிரைவர்கள் மறுத்து விட்டனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு போக்குவரத்து போலீசார் சில இரும்பு தடுப்புகளை கொண்டு வந்து வாகனங்களை நிறுத்த முடியாத வகையில் ஒரு கடைக்கு முன்பு வைத்தனர்.

இதை அறிந்த டிரைவர்கள் திரண்டு வந்தனர். அப்போது போலீசாருக்கும், டிரைவர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசாரும் இரும்பு தடுப்புகளை அகற்ற மறுத்து விட்டனர்.

நேற்று வழக்கம் போல் சுற்றுலா வாகனங்களை டிரைவர்கள் சாலையோரம் நிறுத்த வந்தனர். அங்கு இருப்பு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், 4 வாகனங்கள் மட்டும் நிறுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். மீதமுள்ள வாகனங்களை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என டிரைவர்களை போலீசார் அறிவுறுத்தினர்.

பல ஆண்டுகளாக வாகனங்களை நிறுத்தி வந்த நிலையில் குறிப்பிட்ட கடைக்கு முன்பாக வாகனங்களை நிறுத்த கூடாது என போலீசார் கூறுவதை ஏற்க முடியாது என்று டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவிட்டனர்.

கூடலூரில் சாலையின் நடுவில் வைத்துள்ள தடுப்பு களால் தினமும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அனைத்துதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தேவை இல்லாத இடங்களில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்