மனுநீதி நாள் முகாமில்: 63 பயனாளிகளுக்கு ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

மனுநீதி நாள் முகாமில் 63 பயனாளிகளுக்கு ரூ.1¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

Update: 2018-12-12 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கோத்தகண்டி மட்டத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், ஊனமுற்றோர் உதவித்தொகை பயனாளி ஒருவருக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வீதம் தலா 7 பேர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 5 பேருக்கு ஈமசடங்கு உதவித்தொகை ரூ.67 ஆயிரத்து 500, மாணவ-மாணவிகள் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை ரூ.30 ஆயிரம், 2 பேருக்கு குடும்ப அட்டைகள், 39 பேருக்கு நத்தம் பட்டா உள்பட மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 500 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மனுநீதி நாள் முகாமின் நோக்கமே மக்களை தேடி அரசு என்பது தான். இந்த முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் உங்களை தேடி கிராமத்திற்கு வந்து உள்ளனர். தொலைதூரத்தில் உள்ள வளர்ச்சி குன்றிய கிராமங்களை கண்டறிந்து, அடிப்படை தேவைகளான மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படுகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயமாக கழிப்பறை கட்ட வேண்டும். அவ்வாறு கழிப்பறை கட்ட முடியாத இடங்களில் பொதுக்கழிப்பிடத்தை கட்டி பயன்படுத்த வேண்டும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சை பெற காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. பெண்கள் தாங்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நீலகிரி மாவட்டத்தை தூய்மையாகவும், வளமான மாவட்டமாகவும் மாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரவிக்குமார் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்