அடுக்குமாடி குடியிருப்புகளில் பசுமை உரக்குடில் அமைக்காவிட்டால் குப்பைகள் சேகரிப்பது நிறுத்தப்படும் திருவேற்காடு நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

திருவேற்காடு நகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகளில் பசுமை உரக்குடில் அமைக்காவிட்டால் குப்பைகள் சேகரிப்பது நிறுத்தப்படும் என நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

Update: 2018-12-13 21:45 GMT
பூந்தமல்லி,

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றுவது மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

இதில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 கிலோவுக்கு அதிகமான குப்பைகள் சேரும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள், தனியார் திருமண மண்டபம், பள்ளிகள், கல்லூரிகளின் உரிமையாளர்கள், நகர் நலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகளை பிரிப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

பின்னர் திருவேற்காடு நகராட்சி கமிஷனர் சித்ரா கூறியதாவது:-திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50 வீடுகளுக்கு மேல் உள்ள 23 அடுக்குமாடி குடியிருப்புகள் கண்டறியப்பட்டு உள்ளது.

100 கிலோவுக்கு மேல் குப்பைகள் சேரும் அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் தொழிற்சாலைகள் அந்தந்த பகுதிகளில் அவர்களே பசுமை உரக்குடில் அமைத்து, மக்கும் குப்பையை உரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மக்காத குப்பைகள் நகராட்சி சார்பில் அகற்றப்படும். உரக்குடில் அமைப்பதன் மூலம் சுமார் 4 டன் அளவுக்கு குப்பைகள் சேகரிப்பது குறையும். ஒரு வார காலத்துக்குள் அந்தந்த பகுதிகளில் உரக்குடில் அமைக்க வேண்டும்.

அவ்வாறு அமைக்காவிட்டால் அங்கு நகராட்சி சார்பில் குப்பைகள் சேகரிப்பது நிறுத்தப்படும். உரக்குடில் அமைப்பதற்கு தேவையான உதவிகளையும், உபகரணங்களையும், ஆலோசனைகளையும் நகராட்சி சார்பில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது அவருடன் சுகாதார ஆய்வாளர் சாமுவேல் இருந்தார்.

மேலும் செய்திகள்