மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 39,792 பேருக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை கலெக்டர் மலர்விழி தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 39792 பேருக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-13 23:00 GMT
தர்மபுரி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இதுவரை 1 லட்சத்து 84 ஆயிரம் வேலைதேடுவோர் பதிவு செய்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் இளைஞர்கள், பெண்கள், மாற்றுதிறனாளிகள் என மொத்தம் 39,792 பேருக்கு ரூ.3 கோடியே 65 லட்சத்து 23 ஆயிரத்து 410 உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 மாதத்திற்கு ஒரு முறை உதவித்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. 10–ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு தலா ரூ.200, 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தலா ரூ.300, பிளஸ்–2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு தலா ரூ.400, பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிளுக்கு தலா ரூ.600 என மொத்தம் 1,553 பேருக்கு ரூ.22 லட்சத்து 31 ஆயிரத்து 600 மதிப்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

2015–ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 10–ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு தலா ரூ.600–ம், பிளஸ்–2 வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு சமமான படித்தவர்களுக்கு தலா ரூ.750 –ம், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளுக்கு தலா ரூ.1000–மும் என மொத்தம் 348 பேருக்கு ரூ.8 லட்சத்து 31 ஆயிரத்து 600 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய பதிவை செய்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று பயனடையலாம்

இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்