துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் மனு

ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு பணியாளர்கள் மனுகொடுக்க வந்தனர்.

Update: 2018-12-13 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு பணியாளர்கள் மனுகொடுக்க வந்தனர். அப்போது ஆணையர் இல்லாததால் நகராட்சி மேலாளர் அரங்கபார்த்திபனிடம் ஏ.ஐ.டி.யூ.சி. சங்க மாநில துணை பொதுச்செயலாளர் தண்டபாணி தலைமையில், ஜெயங்கொண்டம் துப்புரவு பணியாளர் சங்கத்தலைவர் தம்பிசிவம், செயலாளர் கொளஞ்சி உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் 50 பெண்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் மனுவை அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட மேலாளர் உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பிவைத்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணிபுரியும் சுகாதார தொழிலாளர்களிடம் பிடிக்கப்படும் சேமநலநிதி பட்டிய லுடன் சேர்ந்து அனைவருக்கும் வருடவாரியாக இருப்புக் கணக்கு சீட்டு வழங்கப்பட வேண்டும். மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த முறை தொழிலாளர்களுக்கு வார விடுமுறை, அரசு விடுமுறை, சீருடை, நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதை போல வழங்க வேண்டும். நிரந்தர தொழிலாளர் களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் சூப்பர் கிரேடு தகுதி பெற்றவர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும். கல்வி தகுதியுள்ளவர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் பணி செய்பவர்களுக்கு மாற்று விடுமுறை அல்லது இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை வாங்கி வீடு கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். துப்புரவு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் உடல் நலனை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து தொழிலாளர் களுக்கும் மழைக்கோட்டு, தரமான கையுறை, நூல் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

மேலும் செய்திகள்