வேலைநிறுத்தம் 4-வது நாளாக நீடிப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் சான்றிதழ்கள் வழங்கும் பணி பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம் நேற்று 4-வது நாளாக நீடித்ததால் சான்றிதழ்கள் வழங்கும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டது. நாமக்கல் உள்பட சில இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-13 22:45 GMT
நாமக்கல், 

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரே அரசாணையின் மூலம் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு முழு கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 4-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 311 கிராம நிர்வாக அலுவலர்களில் 177 பேர் கலந்து கொண்டனர். இதனால் இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கும் பணி முடங்கி உள்ளது. இதேபோல் கடன் உதவி பெறுவதற்கான சான்றிதழ் வழங்கும் பணியும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பழனிசாமி, வட்ட செயலாளர் பிரகாஷ், மகளிர் அணி செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

மோகனூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் அன்புராஜ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் நல்லசிவம், பொருளாளர் இளையராஜா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம் தாலுகா அலுவலகம் முன்பு 11 பெண்கள் உள்பட 27 கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராசிபுரம் வட்ட தலைவர் வருதராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் உதயகுமார், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேந்தமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பாக கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சேந்தமங்கலம் வட்ட செயலாளர் சத்திய சீலன் தலைமை தாங்கினார். இதில் சேந்தமங்கலம் வட்ட பொருளாளர் ஆனந்தகுமார், நிர்வாகிகள் பிரபாகரன், சிவராஜ், அழகேசன் மற்றும் பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருச்செங்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும் (வெள்ளிக் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்