சிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி உடல்நிலை பாதித்த மூதாட்டியிடம் 75 பவுன் நகை மோசடி; உறவினர்கள் மீது புகார்

சிகிச்சைக்கு செலவழித்ததாக ஏமாற்றி 75 பவுன் நகையை மோசடி செய்ததாக உறவினர்கள் மீது உடல்நிலை பாதித்த மூதாட்டி புகார் கொடுத்தார்.

Update: 2018-12-13 22:45 GMT

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வரதன் வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி தவமணி (வயது 70). இவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் தவமணி தனது மகள் கஸ்தூரியுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஒரு வாடகை காரில் நேற்று வந்தார். தவமணியால் எழுந்து நடக்க முடியாததால் அவருடைய புகார் மனுவை, மகள் கஸ்தூரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து கொடுத்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

எனது கணவர் பெருமாள் ரெயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். அதன்பின்னர் எனது மகன் சரவணக்குமாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டது. மகளுக்கு திருமணமாகிவிட்டது.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. இதனால் எனது தங்கையும், அவருடைய கணவரும் எனக்கு உதவியாக இருந்து வந்தனர். மருத்துவ செலவு முதல் அனைத்து செலவுகளுக்கும் பணத்தை அவர்களிடம் கொடுத்து வந்தேன். அவர்களும் என்னிடம் மருத்துவ செலவு என்று கூறி அதிகமான பணத்தை கேட்டனர். நானும் எனது மகனுக்காகவும், எனக்காகவும் தானே மருத்துவ செலவுக்கு பணம் கேட்கிறார்கள் என்று நம்பி பணத்தை கொடுத்தேன். மேலும், எனது சொத்துகளை அடமானம் வைத்தும், என்னிடம் இருந்த நகைகளையும் கொடுத்தேன். பின்னர்தான் மருத்துவ செலவு எனக்கூறி அவர்கள் என்னிடம் நகை, பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னிடம் ஏமாற்றிய 75 பவுன் நகையையும், சொத்துகளையும் மீட்டு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்