கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 4-வது நாளாக வேலை நிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று 4-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

Update: 2018-12-13 22:45 GMT
நீடாமங்கலம்,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 4-வது நாளாக நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் வீரமணி, வட்ட செயலாளர் வியாகுலநெல்சன், வட்ட பொருளாளர் ரமேஷ், வட்ட துணைச் செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வலங்கைமான் வருவாய் வட்டத்தில் பணியாற்றி வரும் 34 கிராம நிர்வாக அலுவலர் களும் நேற்று 4-வது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தையொட்டி வலங்கைமான் தாசில்தார் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் இளையராஜா, செய்தி தொடர்பாளர் செந்தில் குமார், மகளிர் பிரிவு வட்ட செயலாளர் கற்பகவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடவாசல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லட்சுமண்ராஜ், பொருளாளர் வெங்கடேசன், துணைத்தலைவர் மாயவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொருளாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட தலைவர் கதிரேசன், செய்தி தொடர்பாளர் செந்தில் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள், பல்வேறு வகையான சான்றுகள் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்