தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பட்டாவை திரும்ப வழங்க வலியுறுத்தி மண்டியிட்டு பிச்சை கேட்கும் போராட்டம்

பட்டாவை திரும்ப வழங்க வலியுறுத்தி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மண்டியிட்டு பிச்சை கேட்கும் போராட்டம் நடத்தியவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-13 22:45 GMT

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 4 விவசாய தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு உபரி விவசாய நிலம் வழங்கி உள்ளது. அத்துடன் அந்த நிலத்திற்கான பட்டாவையும், அந்தந்த பயனாளிகளுக்கு வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உபரி நிலம் சம்பந்தமாக அப்பகுதியில் பிரச்சினை ஏற்பட்டபோது, வருவாய்த்துறை அதிகாரிகள் 4 பயனாளிகளிடம் இருந்த நிலப்பட்டாவை சரிபார்ப்பதற்காக கேட்டு வாங்கிவிட்டு, பிறகு அந்த பட்டாவை பயனாளிகளுக்கு திரும்ப வழங்கவில்லை.

பயனாளிகள் பலமுறை அதிகாரிகளிடம் சென்று பட்டாவை கேட்டபோது, பட்டாவை திருப்பிக் கொடுக்காததால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் ஆதித்தமிழர் சனநாயகப் பேரவை மாநிலத் தலைவர் பவுத்தன் தலைமையில், தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் மண்டியிட்டு பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து போராட்டத்தில் கலந்து கொண்ட பயனாளிகள் கூறியதாவது:–

கடந்த 2006–ம் ஆண்டு நிலமற்ற ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு, அரசு உபரி விவசாய நிலம் வழங்கியது. அந்த வகையில் குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த 2 பேருக்கும், உடையனார் பாளையம் மற்றும் காணிக்கம்பட்டியை சேர்ந்த தலா ஒருவருக்கும் ஈஸ்வரசெட்டிபாளையம் பகுதியில் 7 ஏக்கர் விவசாய நிலம் ஒப்படை செய்யப்பட்டது. அந்த நிலத்திற்கான அரசு பட்டாவும் எங்களுக்கு முறையாக வழங்கப்பட்டது. அதன் பிறகு சில காலம் நாங்கள் அந்த நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தோம்.

இந்த நிலையில் எங்களிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில், வருவாய்த்துறையினருக்கு சிலர் தவறான தகவல்களுடன் புகார் கொடுத்தனர். இதையடுத்து வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரிகள், எங்களிடம் வந்து அரசு வழங்கிய நிலப்பட்டாவை கேட்டபோது, படிப்பறிவில்லாத நாங்கள் ஏமாந்து அதிகாரிகளிடம் நிலப்பட்டாவை கொடுத்துவிட்டோம். அதன் பிறகு 12 ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் எங்களுக்கு சேரவேண்டிய நிலப்பட்டாவை தராமல் இருந்து வருகிறார்கள். பட்டாவை கேட்கும்போதெல்லாம், கொடுத்து விடுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை கொடுக்கவில்லை.

எனவே அரசு எங்களுக்கு வழங்கிய நிலப்பட்டாவை வருவாய்த்துறை அதிகாரிகள் திரும்ப கொடுக்க வேண்டும். அரசு ஒப்படை செய்த நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்வதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு, சப்–கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் மண்டியிட்டு, கையேந்தி பிச்சை கேட்டு போராட்டம் நடத்தினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, பாராட்டத்தில் ஈடுபட்டவர்களை அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, பயனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சப்–கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்