தாராபுரம் அருகே அரசு பஸ்சை மதுபோதையில் தாறுமாறாக ஓட்டிய டிரைவர்; சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக டிரைவர் ஓட்டிச்சென்றதால், சாலையில் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-13 23:00 GMT

தாராபுரம்,

திருப்பூரில் இருந்து தாராபுரம் வழியாக பழனிக்கு அரசு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் தாராபுரம் புறவழிச்சாலையில் சென்றபோது, தார்ச்சாலையை விட்டு கீழே இறங்குவதும், பின்னர் தார்ச்சாலையில் ஏறுவதும் என தாறுமாறாக சென்றது. இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள், பஸ் தாறுமாறாக வருவதை பார்த்து பயந்துபோய் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையில் அந்த பஸ் தாராபுரம் புறவழிச்சாலையில் இருந்து அலங்கியம் ரோட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தது. அப்போதும் தாறுமாறாக சென்றதால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல்போடத்தொடங்கினர். இதையடுத்து டிரைவரிடம் பஸ்சை நிறுத்துமாறு பயணிகள் கூறினார்கள். ஆனாலும் பஸ்சை டிரைவர் நிறுத்தாமல், அதன்பின்னர் வேகமாக அலங்கியம் ரோட்டில் ஓட்ட தொடங்கினார்.

பஸ் சாலையில் தாறுமாறாக செல்கிறதே? என்ன காரணம் என்று பயணி ஒருவர் டிரைவரிடம் சென்று கேட்டபோது, டிரைவரிடம் இருந்து மதுவாடை வந்தது. மேலும் டிரைவர் சரியாக பேசமுடியாத அளவுக்கு, அதிகமாக மது குடித்து இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அனைவரும் டிரைவரை அடித்து உதைத்து பஸ்சை நிறுத்துமாறு கூறினார்கள். அதற்குள் சீத்தக்காடு கோணவாய்க்கால் பகுதிக்கு பஸ் சென்று விட்டது. அதன்பின்னர் சாலையின் ஓரமாக பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகள், இது குறித்து தாராபுரம் அரசு போக்குவரத்து கழக கிளைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது அந்த பஸ்சின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, அந்த பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் மது குடித்து இருப்பதால் அவரால் பஸ்சை ஓட்ட முடியவில்லை என்றும், எனவே அந்த பஸ் அலங்கியம் ரோட்டில் கோணவாய்க்கால் பகுதியில் நிற்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மாற்று டிரைவர் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

அப்போது அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், அந்த பஸ் பழனி போக்குவரத்து கழக கிளையை சேர்ந்தது என்றும், ஆனாலும் மாற்று டிரைவரை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே நீண்ட நேரமாகியும் மாற்று டிரைவர் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அங்கேயே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவரின் பெயர் சேனாபதி (வயது 43), தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூரை சேர்ந்தவர் என்றும், பழனியில் உள்ள அரசு போக்குவரத்து கழக கிளையில் டிரைவராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இவர் திருப்பூரில் பஸ்சை எடுக்கும்போதே மது குடித்து இருப்பதும், அதன்பின்னர் தாராபுரம் பஸ் நிலையம் வந்ததும், பஸ்சை அங்கு நிறுத்தி விட்டு, மீண்டும் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்து விட்டு அதன்பின்னர் பஸ்சை ஓட்டிச்சென்றதும் தெரியவந்தது. சேனாபதியால் நிற்க முடியாத அளவுக்கு மது குடித்து இருந்த நிலையில் பஸ்சை ஓட்டிச்சென்றதும், அதனால் பஸ்சை சாலையில் ஓட்டிச்செல்லாமல் அங்கும் இங்குமாக தாறுமாறாக ஓட்டிச்சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேனாபதியை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின்னர் மாற்று டிரைவர் ஏற்பாடு செய்து பயணிகளை அதே பஸ்சில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேனாபதி ஏற்கனவே மது குடித்து விட்டு வேலைக்கு செல்வதும், மதுபோதையில் பஸ் ஓட்டிச்செல்வதுமான புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்றும் மது குடித்து விட்டு பஸ்சை தாறுமாறாக ஓட்டி சென்று இருப்பது குறிப்பிட தக்கது.

மேலும் செய்திகள்