ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளை எங்களது கூட்டணியில் சேர்ப்போம் : அசோக் சவான் பேட்டி

ஓட்டுகள் சிதறுவதை தடுக்க சிறிய கட்சிகளையும் எங்களது கூட்டணியில் சேர்ப்போம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறியுள்ளார்.

Update: 2018-12-13 23:47 GMT

மும்பை, 

மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மும்பையில் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் விஷம் குடித்தும், தூக்குப்போட்டும் தற்கொலை செய்து கொள்கின்றனர். மராட்டியத்தில் தான் அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இதை கண்டு கொள்ள பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு தயாராக இல்லை.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதால், பா.ஜனதா சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என கூறமுடியாது. மாநில அரசு ஊழல் நிறைந்தது. ஊழல் பணம் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு இரைக்கப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலுக்கு சரியான வேட்பாளர்களை சரியான தொகுதிகளுக்கு தேர்வு செய்வதே எங்களது முக்கிய குறிக்கோள். தேர்தலுக்கு மெகா கூட்டணியை உருவாக்கி வருகிறோம். தேசியவாத காங்கிரசுடன் வெற்றிகரமாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது. 10 சதவீத பிரச்சினைகள் மட்டுமே பாக்கி உள்ளன. ஓட்டுகள் சிதறாத வகையில் சிறிய கட்சிகளையும் எங்கள் கூட்டணியில் சேர்ப்போம்.

பாகிஸ்தானில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்ய வேண்டியதற்கான அவசியம் என்ன?. இதனால் சர்க்கரை விலை சரிந்தது. மத்திய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதா 5 மாநிலத்திலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த முடிவு விவசாயிகள் விரோத, ஏழைகள் விரோத, பழங்குடியின மக்கள் விரோத, தலித் விரோத அரசுக்கு எதிரானது.

பா.ஜனதா போலி வாக்குறுதிகளில் கவனம் செலுத்துகிறது என்பதை மக்கள் உணர தொடங்கி உள்ளனர். சா்வாதிகார மோடி அரசை மக்கள் நிராகரித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்