மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பில் மறைத்து ரூ.10 லட்சம் தங்கம் கடத்தல் வாலிபரிடம் விசாரணை

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செருப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 2 தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

Update: 2018-12-14 22:00 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதையடுத்து விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் சென்னையைச் சேர்ந்த முகமது உசேன்(வயது 24) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்து இருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் முகமது உசேன் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்். இதனால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் முகமது உசேன் அணிந்து இருந்த செருப்பை கழற்றி சோதனை செய்தனர். அதில் செருப்பின் அடிப்பகுதியில் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். அந்த தங்க கட்டிகளை யாருக்காக மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?, இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து பிடிபட்ட முகமது உசேனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்