சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அன்பழகன் வழங்கினார்

சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு கலெக்டர் அன்பழகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-12-14 22:45 GMT
கரூர்,

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 76 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில், முதியோர் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்த நபர்களில் 4 நபர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மேலும், விபத்து நிவாரணத்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் என பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் 43 நபர்களுக்கு ரூ.20 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் மீனாட்சி, வட்டாட்சியர்கள் ஈஸ்வரன் (கரூர்), பிரபு (அரவக்குறிச்சி) உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்