மாவனல்லாவில் சாலையில் உலா வரும் ரிவால்டோ யானை; வாகன ஓட்டிகள் அவதி

மாவனல்லாவில் சாலையில் உலா வரும் ரிவால்டோ யானையால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2018-12-14 23:00 GMT

மசினகுடி,

மசினகுடி அருகே உள்ள மாவனல்லாவில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது. இந்த யானைக்கு ‘ரிவால்டோ‘ என்று பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வருகின்றனர். துதிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக மாவனல்லா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த யானை, தற்போது காயம் குணமடைந்த நிலையிலும் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. பகல் நேரங்களிலேயே குடியிருப்புக்குள் புகுந்து வரும் அந்த யானையை, பொதுமக்கள் வனப்பகுதியை நோக்கி துரத்தினாலும் செல்வதில்லை. வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் துரத்தி விட்டாலும், சிறிது நேரத்திலேயே மீண்டும் குடியிருப்புக்குள் திரும்பி வந்து விடுகிறது.

இந்த நிலையில் மாவனல்லா– மசினகுடி சாலையிலும் ரிவால்டோ யானை அடிக்கடி உலா வருகிறது. அப்போது சாலையின் குறுக்கே நின்று கொண்டு வாகனங்களை மறிப்பதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:–

வனப்பகுதியில் சுற்றித்திரிய வேண்டிய காட்டுயானை குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிகிறது. இந்த ரிவால்டோ யானையின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே அதனை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று பலமுறை சிங்காரா வனத்துறையினரிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வனப்பகுதியில் உள்ள விலங்குகள் குடியிருப்புக்குள் வராமல் தடுக்க வேண்டியது வனத்துறையின் கடமை. ஆனால் தொடர்ந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு செய்து வரும் ரிவால்டோ யானையை பிடிக்காமல் வனத்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே விரைவாக இதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்