பாட்டவயலில் வாழைகளை சேதப்படுத்திய காட்டுயானைகள்

பாட்டவயலில் வாழைகளை காட்டுயானைகள் சேதப்படுத்தின.

Update: 2018-12-14 22:45 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா பாட்டவயல், காரக்குனி, போலீஸ் சோதனைச்சாவடி, பாலாப்பள்ளி உள்ளிட்ட பகுதியில் காட்டுயானைகள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் பொதுமக்களின் குடியிருப்புகளையும் இடித்து வருகின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் பீதி அடைந்து உள்ளனர்.

இரவில் பாட்டவயல் போலீஸ் சோதனைச்சாவடியை காட்டுயானைகள் அடிக்கடி முற்றுகையிடுகின்றன. இதனால் போலீசார் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் போலீசாரை காட்டுயானைகள் துரத்திய சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் காரக்குனி பகுதியில் 5 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து பொதுமக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டன.

அப்போது அஜித்குமார் என்பவரின் தோட்டத்துக்குள் காட்டுயானைகள் நுழைந்து வாழைகளை தின்று சேதப்படுத்திவிட்டு வனப்பகுதிக்குள் சென்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பிதிர்காடு வனச்சரகர் மனோகரன், வன காப்பாளர் மோகன்ராஜ், வன காவலர் நஞ்சுண்டன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது பாதிக்கப்பட்ட விவசாயி அஜித்குமார் காட்டுயானைகளால் வாழைகள் சேதம் அடைந்துள்ளதால், மிகுந்த நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளதாகவும், எனவே இழப்பீடு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தார். எழுத்து பூர்வமாக மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். காட்டுயானைகளின் அட்டகாசத்தால் பாட்டவயல் பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்