பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-12-14 23:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கடந்த 10-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 502 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் 256 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சை தாசில்தார் அலு வலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் சொர்ண.அறிவழகன், மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பெண் கிராம நிர்வாக அலுவலர்களை அவரவர் சொந்த மாவட்டத்தில் பணி புரியும் வகையில் பணி மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். சான்றிதழ்கள் வழங்க இணையதள வசதியுடன் கூடிய கணினி வழங்க வேண்டும். ஒரு கிராம நிர்வாக அலுவலர், கூடுதல் பணியாக 2 கிராமங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் இணைச் செயலாளர் ராஜசேகர், துணைச் செயலாளர் விஜயபாஸ்கர், கொள்கை பரப்பு செயலாளர் தங்கமுத்து மற்றும் தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு தாலுகாக்களில் பணி புரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்