வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30½ லட்சம் மோசடி - திண்டுக்கல் தம்பதி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30½ லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2018-12-14 22:45 GMT
தேனி,

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.30½ லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த போஸ் மகன் பாஸ்கரன் (வயது 27). இவருக்கு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் கிழக்கு முஸ்லிம் தெருவை சேர்ந்த ஜாபர்அலி மகன் முகமது சலீம் (30) என்பவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாக ஆன்லைன் மூலம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் முகமது சலீமை, பாஸ்கரன் தொடர்பு கொண்டார்.

அப்போது அவர் பாஸ்கரனையும், அவருடைய நண்பர்களையும் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதை நம்பிய பாஸ்கரனின் நண்பர்கள் 12 பேர் சேர்ந்து ரூ.30 லட்சத்து 64 ஆயிரத்தை கடந்த 2016-ம் ஆண்டு முகமது சலீம், அவருடைய மனைவி சுமையாபானு (23), தம்பி முகமது ரசீத் ஆகியோரிடம் நேரிலும், வங்கிக் கணக்கு மூலமும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

பணம் பெற்றுக் கொண்டு 15 பேருக்கு விசா வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில், பாஸ்கரனுடைய நண்பர்களான ஜெகநாதன், நரசிம்மகுப்தா, ஸ்ரீநாத் ஆகிய 3 பேரையும் கனடா நாட்டுக்கு அனுப்புவதாக கூறிவிட்டு, இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தநிலையில் விசா காலம் முடிந்து, அங்கு தங்கிய 3 பேருக்கும் இந்தோனேசியாவில் மொத்தம் ரூ.7 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் பணத்தை செலுத்தி நண்பர்கள் 3 பேரையும் அழைத்து வந்துள்ளார்.

பின்னர் விசாவை ஆய்வு செய்ததில் அது போலியான விசா என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து கொடுத்த பணத்தை கேட்ட போது, அவர்கள் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாஸ்கரன் புகார் செய்தார். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையை தொடர்ந்து முகமது சலீம், சுமையாபானு, முகமது ரசீத் ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்.


மேலும் செய்திகள்