பண்ருட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்; 27 பேர் கைது

பண்ருட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-14 22:45 GMT

பண்ருட்டி,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை பற்றி அவதூறாக பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து அண்ணாகிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாகி தமிழ்மாறன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்துகொண்டவர்கள் எச்.ராஜாவை கண்டித்து கோ‌ஷம் எழுப்பினர். பண்ருட்டி பஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் பண்ருட்டி 4 முனை சந்திப்பை சென்றடைந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் எச்.ராஜாவின் உருவ படத்தையும் தீவைத்து எரித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதித்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாநில நிர்வாகி தமிழ்மாறன், மாவட்ட அமைப்பாளர் வெங்கடசாமி, நகர செயலாளர்கள் கிருஷ்ணராஜ், கார்த்தி, ராஜி, ஒன்றிய செயலாளர் பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் வாசன், நிர்வாகிகள் கலியபெருமாள், மணிவேந்தன், பிரபு, கண்ணதாசன் உள்ளிட்ட 27 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதேபோல் சிதம்பரம் காந்தி சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி தலைமையில் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீவைத்து எரித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் நகர போலீசார் விரைந்து வந்து, அவர்களை கலைத்தனர். மேலும் இது தொடர்பாக பால.அறவாழி, செல்லப்பன், செல்வ.செல்வமணி, கோ.நீதிவளவன், குறிஞ்சிவளவன், திருவரசு, யாழ்திலிபன், கோவி.பாவாணன், க.ஆதிமூலம் உள்பட 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்