ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை அலி நகரில் புதிய இறை இல்லம் திறப்பு விழா; அமைச்சர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை அலி நகரில் உலகத்தரம் வாய்ந்த புதிய இறை இல்லம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் மணிகண்டன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Update: 2018-12-14 23:31 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் பிரப்பன்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அலி நகரில் உலக தரம் வாய்ந்த புதிய இறை இல்லம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று காலை 9.30 மணிக்கு மேல் ஜாமியா மஸ்ஜித் அலி நகர் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தலைமையில் பெர்சத்துவான் அலிநகர் முஸ்லிம் ஜமாத் மலேசியா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், ஐக்கிய அமீரக கல்ப் அலிநகர் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

அலிநகர் ஜாமியா மஸ்ஜித் முன்னாள் தலைமை இமாம் முனவர் ஹசன் நூரி கிராஅத் ஓதினார். விழாவுக்கு வந்திருந்தவர்களை முன்னாள் ஊராட்சி தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான அலிநகர் ஜமாத் கமிட்டி தலைவர் புரவலர் ராஜாமுகமது வரவேற்றார். பின்னர் அலிநகர் தலைமை இமாம் செய்யது அபுபக்கர் சித்திக் சித்தாரி பாஜின் மன்பாஇ தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சிகளை வேதாளை ஹனபி பள்ளி தலைமை இமாம் பக்கீர் முகமது ஜலாலி தொகுத்து வழங்கினார்.

உலக தரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான இறை இல்லத்தில் மலேசிய கோலாலம்பூர் டத்தோ டாக்டர் நூருல் அமீன், சமுதாய செம்மலும் கோலாலம்பூர்–மலேசியா அலி மாஜூ குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் டத்தோ ஜவகர் அலி, கோலாலம்பூர்–மலேசியா மெட்ரோ செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனர் அப்துல் காதிர் ஹசன் அலி ஆகியோர் பள்ளிவாசல் மற்றும் கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை ஜே.எம்.எஸ். அரபிக்கல்லூரி நிறுவனர் முகமது அஸ்ரப் அலி ஹல்ரத் கிப்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த உஸ்மானியா அரபிக்கல்லூரி பேராசிரியர் ஹாஜாமுய்னுதீன் ஆலிம் விழா பேரூரையாற்றினார்.

அதன் பின்னர் இந்த சிறப்பான இறை இல்லத்தை வடிவமைத்து கட்டிமுடித்து பிரப்பன்வலசை அலிநகருக்கு பெருமை சேர்த்தமைக்காக ரெத்னா பில்டர்ஸ் தலைமை பொறியாளர் பால்பாண்டியன், மற்றும் நிறுவனர் ரெத்தினம் ஆகியோருக்கு கிராம மக்களின் சார்பில் அவர்களது பணியை பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த விருதினை பெர்சத்துவான் அலிநகர் முஸ்லிம் ஜமாத், அலிநகர் முஸ்லிம் ஜமாத், சற்குண சன்மார்க்க சங்கம் ஆகியவை சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் கலந்து கொள்வதற்காக பள்ளிவாசலுக்கு வந்தார். அவரை பொறியாளர் பால்பாண்டியன், அலிநகர் கிராம தலைவர் ராஜாமுகமது, பெர்சத்துவான் அலிநகர் முஸ்லிம் ஜமாத் மலேசியா, அமீரகம் முஸ்லிம் ஜமாத் ஆகியவற்றின் நிர்வாகிகள் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் அல்பலா குரூப் நிறுவனர் முகமது அலி, வழுதூர் முஸ்லிம் ஜமாத் தலைவரும், அல்பரீதா குரூப் நிறுவனருமான ஜமால் முகமது, சாத்தான்குளம் முஸ்லிம் ஜமாத் தலைவர் காபத்துல்லா, மலேசியா தொழில் அதிபர் அயூப்கான், ராமநாதபுரம் பரக்கத் மகால் நிறுவனர் உஸ்மான் அலி, சப்ரா குரூப் நிர்வாக இயக்குனர் சபீர் அலி, பிரப்பன்வலசை கிராம முக்கிய பிரமுகர்கள் மாணிக்கம், ராமச்சந்திரன், சேது, முனியாண்டி, ஊராட்சி செயலர் பன்னீர்செல்வம், ஏசியன் பில்டிங் மெட்டீரியல்ஸ் மேலாண்மை இயக்குனர் முஜிப் ரகுமான், நிர்வாக இயக்குனர்கள் அப்துல் ஹமீது, அக்பர் உசேன், பிரப்பன்வலசை முன்னாள் கவுன்சிலர் சாமி என்ற ஜோதிர் முனியசாமி, என்மனங்கொண்டான் முன்னாள் ஜமாத் தலைவர் அப்துல் மாலிக், ரஞ்சித்குமார் தச்சுப்பட்டறை உரிமையாளர் குமார், சுபலெட்சுமி பஜாஜ் நிர்வாக இயக்குனர் அரு.சுப்பிரமணியன், அல்பரீதா குரூப் சேர்மன் அபுல்கலாம், பவர் குரூப் நிறுவன சேர்மன் ஜாகீர் உசேன், புதுநகரம் முன்னாள் ஜமாத் தலைவர் முகமது நஹீப், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி தலைவர் வக்கீல் ரவிச்சந்திர ராமவன்னி, பவர் செக்யூரிட்டி நிர்வாக இயக்குனர் அஜீஸ், ராமநாதபுரம் மகாராஜா ஜவுளி நிறுவன மேலாளர் ஒலி முகமது, பாரதிநகர் அஜந்தா சுலைமான், அ.ம.மு.க. ராமநாதபுரம் டாக்டர் கனி, மண்டபம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், அப்சல் மொபைல் சிராஜுதீன் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உலமாக்களும், ஜமாத் நிர்வாகிகளும், சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக பிரப்பன்வலசை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்து சமூக பிரமுகர்கள், இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு மலேசியா, சிங்கப்பூர், துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வரக்கூடிய அலிநகரை சேர்ந்தவர்களும், புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், வழுதூர், சாத்தான்குளம், வாலாந்தரவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்து கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை அலிநகர் முஸ்லிம் ஜமாத் கமிட்டியினர் மற்றும் சற்குண சன்மார்க்க சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவையொட்டி புதிய பள்ளிவாசலில் ஜும்மா பள்ளிவாசலில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இறுதியாக ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் செய்யது அபுபக்கர் சித்திக் சித்தாரி பாஜின் மன்பாஇ உலக ஒற்றுமைக்காகவும், உலக நன்மைக்காகவும், அனைத்து சமூக மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் உருக்கமான துஆ ஓதினார். முடிவில் சற்குண சன்மார்க்க சங்க நிர்வாகிகள் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்