ஸ்ரீமுஷ்ணத்தில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை கொள்ளை

ஸ்ரீமுஷ்ணத்தில் உதவி தலைமை ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-12-15 22:57 GMT
ஸ்ரீமுஷ்ணம்,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 52). கொழை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரான இவர், ஸ்ரீமுஷ்ணத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி லதா மகேஷ்வரி(46). மகன் ராகுல்(23). இவர் கேரளாவில் தங்கி படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தை கிருஷ்ணசாமியை புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தமிழ்செல்வன் அழைத்து சென்றார். உடன் அவரது மனைவி லதா மகேஷ்வரியும் சென்றார். அங்கு 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றனர்.

சிகிச்சை முடிந்த பின்னர் தனது தந்தை கிருஷ்ணசாமியை அவரது சொந்த ஊரான விநாயகபுரத்தில் கொண்டு விட்டு விட்டு நேற்று இரவு 8 மணிக்கு தனது மனைவியுடன் தமிழ்செல்வன் ஸ்ரீமுஷ்ணத்துக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்தபோது பின்புற கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு தமிழ்செல்வனும், அவரது மனைவியும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படுக்கை அறையை சென்று பார்த்தபோது அங்குள்ள கதவும் உடைக்கப்பட்டு பீரோவின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை.

தமிழ்செல்வன் வீட்டில் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம மனிதர்கள் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றது தெரிய வந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்து ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு உதவி தலைமை ஆசிரியர் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கதவுகளில் இருந்த ரேகைகளையும், தடயங்களையும் சேகரித்து சென்றனர் . மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்