மாணவ-மாணவிகளின் நலன் கருதி கல்வித்துறைக்கு அதிக நிதியை அரசு ஒதுக்கி வருகிறது - திருப்பூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு

மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்துறைக்கு அதிக நிதியை அரசு ஒதுக்கி வருகிறது என்று திருப்பூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-12-15 23:30 GMT
திருப்பூர்,

திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன் பேசும் போது கூறியதாவது:-

தமிழக மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கல்வித்துறைக்கு என்று அரசு அதிக நிதியை ஒதுக்கி வருகிறது. இதன்படி மங்கலத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியை, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்படும்.

6-ம் வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 4 சீருடைகள் வழங்கப்படும். 6 ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 11 லட்சம் ‘டேப்’ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முடிவதற்குள் அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக்கப்பட்டு, அதில் இணையதள வசதியும் செய்து கொடுக்கப்படும். மேலும் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் பள்ளிகளில் கொண்டுவரப்படும்.

பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ஸ்கில் டிரைனிங் என்ற பாடத்திட்டம் இணைக்கப்படும். அவ்வாறு இணைக்கப்படும் போது பிளஸ்-2 முடித்தாலே அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்படும். நீட் தேர்வுக்காக 413 மையங்களில் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அத்துடன் ஜி.எஸ்.டி. எனப்படும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வரிதிட்டத்தை தணிக்கை செய்யும் வகையில் இந்தியாவில் மொத்தம் 2 லட்சத்து 85 பேர் மட்டுமே உள்ளனர். 500 ஆடிட்டர்கள் மூலம் 25 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச ஆடிட்டர் பயிற்சிகொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆகவே சிறந்த கல்வியாளர்களாக நீங்கள் மாறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை ஜனவரி 3-ம் வாரத்திற்குள் நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.

வகுப்பறையில் கவனம் தவறி விட்டால் யூ-டியூப் மூலம் செல்போனில் அந்த பாடத்தை பதிவிறக்கம் செய்து அதை கற்றுக்கொள்ளும் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசும் போது, தமிழகத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கான திட்டங்கள் கல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, புத்தகப்பை மற்றும் காலணிகள் உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்பதற்காக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதை மாணவர்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து 341 மாணவ, மாணவிகளுக்கு ரூ.12 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களையும், 1 லட்சம் துணிப்பைகளையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும், மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியை திருப்பூர் மேற்கு ரோட்டரி சங்கம் தத்தெடுத்ததற்கான ஆணையையும், அமைச்சர்கள் வழங்கினார்கள். சிறப்பாக பணியாற்றியதற்காக ரோட்டரி சங்கத்திற்கு கேடயமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.எல்.ஏ.க்கள் கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), குணசேகரன்(தெற்கு), மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, சப் -கலெக்டர் ஷ்ரவன் குமார், ரோட்டரி மாவட்ட கவர்னர் உமா, உதவி கவர்னர் எபிசண்ட் மணி, செயலாளர் கோபிநடராஜ மூர்த்தி, பொருளாளர் ரகுபதி, அ.தி.மு.க. மங்கலம் பகுதி நிர்வாகிகள் சுப்பிரமணியம், முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல திருப்பூர் தெற்கு தொகுதியை சேர்ந்த உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 21 வார்டுக்குட்பட்ட 447 பயனாளிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானிய விலையிலான ரூ.74 ஆயிரம் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் மற்றும் 26 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21 லட்சத்து 90 ஆயிரம் வங்கி கடன் உதவிகளையும் வழங்கினார்கள்.

பெருமாநல்லூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 454 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 லட்சத்து 89 ஆயிரத்து 563 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களையும் அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில், திருப்பூர் வடக்கு தொகுதி விஜயகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் 273 மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 16 மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தனியரசு எம்.எல்.ஏ. (காங்கேயம்), மகளிர் திட்ட அதிகாரிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்