கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக பணியை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குடிநீர் வினியோகம், சாலைப்பணிகளை தொய்வின்றி செயல்படுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-12-15 23:27 GMT
கோவை,

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம், தெருவிளக்குகள், சாலைப்பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது கூறியதாவது:–

கோவை மாநகராட்சி, தமிழகத்தின் முக்கியமான தொழில் நகரங்களில் ஒன்றாகும். தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டும், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவ்வாறு அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவேற்றிட மாநகராட்சி அலுவலர்கள் சிரத்தையுடன் பணியாற்றிட வேண்டும்.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படுகின்றதா? என்று மண்டல அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். அனைத்து வார்டுகளிலும், தினந்தோறும் துப்புரவு பணியாளர்களை கொண்டு முழுசுகாதார துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாநகர பகுதிகளில் இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு எரியாத தெருவிளக்குகள் தொடர்பான புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடியாக சீர்செய்திட வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சியில் அங்கீகாரமற்ற மனைகளை மாநகராட்சியின் விதிமுறைகளின்படி வரன்முறைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கும், மக்கா குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளையும், அனைத்து வார்டுகளிலும் தூய்மை பணிகளையும் சுகாதார பணியாளர்கள் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டுமெனவும், மாநகராட்சி அலுவலர்கள் இப்பணி தொடர்பாக நேரடியாக களஆய்வு மேற்கொண்டு மாநகராட்சியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் மேம்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைதொடர்ந்து, கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மரணம் அடைந்த மற்றும் மருத்துவ இயலாமை காரணமாக பணி ஓய்வு பெற்ற பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி 4 நபர்களுக்கும், துப்புரவு பணியாளர் பணி 34 நபர்களுக்கும் ஆக மொத்தம் 38 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், எட்டிமடை சண்முகம், வி.சி.ஆறுகுட்டி, பி.சத்யநாராயணன், துணை ஆணையாளர் காந்திமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்