சொத்து பிரச்சினையில் தொழிலாளி அடித்துக்கொலை அண்ணன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

திருப்பனந்தாள் அருகே சொத்து பிரச்சினையில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த அண்ணன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-12-16 22:15 GMT
திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளை அடுத்த குருகூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மகன்கள் கலைச்செல்வன் என்கிற மாரியப்பன் (வயது42), செந்தில்குமார் (39). இருவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். 2 பேரும் கூலித்தொழிலாளிகள்.

இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார் மதுபோதையில் வந்து தனது அண்ணன் மாரியப்பனிடம் பூர்வீக சொத்து தொடர்பாக பிரச்சினை செய்துள்ளார். அப்போது அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மாரியப்பனை, செந்தில்குமார் தாக்க முயன்றார்.

இதை தடுக்க வந்த மாரியப்பனின் மனைவி மாலாவையும் தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் மற்றும் மனைவி மாலா, மகன் விமல் ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் செந்தில்குமாரை தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், செந்தில்குமார் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பனந்தாள் போலீசார், மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், இதுதொடர்பாக செந்தில்குமாரின் மனைவி சுகந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மாரியப்பன், மாலா, விமல் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

சொத்து பிரச்சினையால் தம்பியை அவரது அண்ணன் குடும்பத்தினர் அடித்துக்கொலை செய்த சம்பவம் திருப்பனந்தாள் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்