நாகையில் கடல் சீற்றம்: மீனவர்கள் 3-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

நாகையில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2018-12-16 23:00 GMT
நாகப்பட்டினம்,

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது. இந்த புயல் ஆந்திராவில் இன்று (திங்கட்கிழமை) கரையை கடக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதன் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

நாகையில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அடிக்கடி ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று 3-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீனவர்களின் படகுகள் கடலை ஒட்டி உள்ள கடுவையாற்றங்கரையோரம் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியிலும் கடல் சீற்றமாக காணப்பட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கடந்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி நள்ளிரவு வீசிய ‘கஜா’ புயல் பாதிப்பில் இருந்து மீனவர்கள் இன்னும் மீளவில்லை. அதற்குள் புதிய புயல் உருவாகி இருப்பது மீன்பிடி தொழிலை முடங்க செய்து உள்ளது.

மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மீன் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்